சென்னை விமான நிலையத்தில் புதிய கார் நிறுத்துமிடம் திறப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் டி1 முனையத்தில் பயணிகளுக்கான புதிய கார் நிறுத்துமிடம் (Cab pick-up plaza) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. ரூ.28.72 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி, பயணிகள் முனையத்திற்கு அருகிலேயே வாடகை கார்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் கார்களைப் பெறுவதற்காகப் பல அடுக்கு கார் நிறுத்துமிடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.
இந்த புதிய வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களின் கார்களுக்காகத் தனித்தனி பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஊபர் (Uber) நிறுவனத்திற்கு ஏ1 முதல் ஏ7 வரையிலும், ஓலா (Ola) நிறுவனத்திற்கு ஏ9 முதல் ஏ12 வரையிலும் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் டிராக் (Fast Track) டாக்ஸிகள் ஏ13 முதல் ஏ14 வரையிலும், ப்ரீபெய்ட் டாக்ஸிகள் பி1 முதல் பி3 வரையிலும் நிறுத்தப்படும். மேலும், ரேபிடோ (Rapido) பி4 முதல் பி7 வரையிலும், டபிள்யூ.டி.ஐ (WTi) கார்கள் பி9 முதல் பி12 வரையிலும், ரெட் டாக்ஸி (Red Taxi) பி13 முதல் பி14 வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
