சனிக்கிழமைகளில் சோபா, மெத்தை அகற்றும் சேவை: மாநகராட்சி சார்பில் 33 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை மாநகராட்சியின் சனிக்கிழமை கழிவு அகற்றும் சேவை மூலம், ஒரே நாளில் 33.74 டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீடுகளில் உள்ள பழைய சோபா, மெத்தை உள்ளிட்ட திடக் கழிவுகளை அகற்றும் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முன்கூட்டியே 'நம்ம சென்னை' செயலி அல்லது 1913 என்ற மாநகராட்சி உதவி எண் அல்லது 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று கழிவுகளைச் சேகரித்து அறிவியல் முறையில் பாதுகாப்பாக அகற்றுகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 132 நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 33.74 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
