மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: மீனவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கோரிக்கை
நெம்மேலியில் ரூ.342 கோடியில் அமையும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதை கைவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் ரூ.342 கோடி செலவில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும், நகரின் குடிநீர் ஆதாரத்தைச் சிதைக்கும் என்றும் கூறி, அப்பகுதி மீனவர்களும் சூழலியலாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவளம் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். நாராயணன் கூறும்போது, 'ஐஐடி-யின் சாத்தியக்கூறு அறிக்கை போதுமானதாக இல்லை. மழைநீர் கடலுக்குச் செல்வது தடுக்கப்படுவதால் மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும்' என்றார். நெம்மேலி மீனவர் மோகனா, இது தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அந்தப் பகுதிக்கு ஆண்டுதோறும் வலசை வரும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசின் இந்த நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
