6 ஆயிரம் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில், 6 ஆயிரம் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ், இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபர் மோசடிகள் மற்றும் போதைப்பழக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சைபர் மோசடிகளால் பொதுமக்கள் நாளொன்றுக்கு ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பதாகத் தெரிவித்த அவர், விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு முக்கியக் காரணம் என்றார். தொடர்ந்து, 'வாழ்வைத் தேர்ந்தெடுங்கள், போதைக்கு இல்லை' என்ற தலைப்பில் மாணவர்களின் மவுன நாடகம் அரங்கேற்றப்பட்டது.
காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் புதிய போதைப்பொருள் எதிர்ப்பு இலச்சினையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, அவர் தலைமையில் சுமார் 6 ஆயிரம் மாணவ-மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
