சென்னை இஸ்கான் கோயிலில் 46-வது ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்
சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விழா நேற்று திரளான பக்தர்களின் பங்கேற்புடன் விமரிசையாக நடைபெற்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி எழுந்தருளினர்.
மதியம் 3.30 மணி அளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க, திரளான பக்தர்கள் ‘ஹரே கிருஷ்ணா’ கோஷமிட்டபடி வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர். இந்த ஊர்வலம் நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாகச் சென்றது. ரத யாத்திரை மீண்டும் கோயிலை வந்தடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
