சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னையில் போக்குவரத்துத் துறை முன்னாள் அதிகாரி மற்றும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக, தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூரில் தலா ஒரு இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை முன்னாள் துணை ஆணையர் தரணிதரன், பணியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. அவருக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேசன் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஐதராபாத்தில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு முடிந்ததும் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
