ஆழியாறில் வாகனம் மோதியதில் குரங்கு படுகாயம்
ஆழியாறு-வால்பாறை சாலையில் கார் மோதி படுகாயமடைந்த குரங்கை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

ஆனைமலை அடுத்த ஆழியாறு வனப்பகுதியில், வால்பாறை சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சுமார் 5 வயதுடைய ஆண் குரங்கு பலத்த காயமடைந்தது. கார் நின்றவுடன் குரங்குக்கு பொதுமக்களில் ஒருவர் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், படுகாயமடைந்த குரங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை கவனமாகவும், மெதுவாகவும் இயக்க வேண்டும் என்றும், விலங்குகளைக் கண்டால் புகைப்படம் எடுக்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
