ஆபத்தாக வாகனங்களை இயக்கிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 11 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை செட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனங்களில் அதீத வேகமாகவும், மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சென்ற இளைஞர்கள் மீது மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் வந்தன. வாகனங்களை உரச செய்து தீப்பொறி பறக்கச் செய்தும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியும் அவர்கள் சாலை விதிகளை மீறியுள்ளனர்.
விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்டது கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 11 பள்ளி மாணவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத் து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களான அங்கராஜ், உமாமகேஸ்வரி, சசிகுமார், தர்மராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் மீது செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
