கோவையில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தனியார் மயமாக்கல் கொள்கையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். மேலும், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 42 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
