குன்றத்தூர் அருகே பள்ளி பேருந்தில் திடீர் தீ: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்
குன்றத்தூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீப்பிடித்தது, ஓட்டுநர் மற்றும் ஊழியர்களின் துரித நடவடிக்கையால் மாணவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே கோவூரில் நேற்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, திடீரென பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் மாணவர்கள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதற்கிடையில், பேருந்தின் முன்பகுதியில் தீ வேகமாக பரவியது. அருகே இருந்த எரிவாயு நிலைய ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளைக் கொண்டு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் எவ்வித காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பின்னர் மாற்று வாகனம் மூலம் அவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
