சதுரகிரி மலைப்பாதையில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலதிருமாணிக்கத்தைச் சேர்ந்த சிவகுமார் (33) என்பவர், ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் சென்றார். சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையேறிச் சென்ற அவர், சந்தன மகாலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அன்னதான மண்டபம் அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிவகுமார் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
உயிரிழந்த சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
