பெண் பூ வியாபாரி தற்கொலை; கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் கைது
மதுரையில் கந்துவட்டி கொடுமையால் பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி பிரேமா (49), கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேமா, தனது மகள் திருமணத்திற்காக சிக்கந்தர்சாவடி கலையரசி, திருப்பதி உள்ளிட்டோரிடம் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்த முடியாமல் திணறிய பிரேமாவுக்கு, கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 13-ம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிரேமாவின் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திருப்பதி, கலையரசி உள்ளிட்ட 4 பேர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கலையரசியை காவல்துறையினர் கைது செய்தனர்; மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
