சீகூர் யானை வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: உச்ச நீதிமன்றம் மனு தள்ளுபடி
சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீலகிரி மாவட்டம் சீகூர் பீடபூமியில் யானை வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ரிசார்ட் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு வழங்கி கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவும் வணிக நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் ஆணையிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரிசார்ட் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், யானை வழித்தடப்பகுதியில் வணிக ரீதியான நடவடிக்கைகள் நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாநில அரசை அணுகலாம் என்றும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
