ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாற்றம், கோயில் குடமுழுக்கு மற்றும் வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில், கலவை அடுத்த பின்தித்தாங்கதாங்கல் கிராம மக்கள் அளித்த மனுவில், தங்கள் கிராமத்தில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். மாற்று இடத்தில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கோபுரம் மற்றும் சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளதால், ஆகம விதிப்படி குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன மக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
