சேலம் அருகே தங்க நகைக்காக வயதான தம்பதி கொலை
சேலம் அருகே வீட்டில் தனியாக வசித்த ஜெயராமன் - அமராவதி தம்பதியினர் தங்க நகைக்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் வயதான தம்பதியினர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி, குண்டுக்கல் ராமப்பகொட்டாயைச் சேர்ந்த ஜெயராமன் (85), அமராவதி (70) ஆகியோர் தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மர்ம நபர் ஒருவர் தம்பதியரைத் தாக்கி கொலை செய்துள்ளார். அப்போது அமராவதியின் காதில் இருந்த தோடு மற்றும் மூக்குத்தி திருடப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயங்களைச் சேகரித்து தப்பி ஓடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
