ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தர்ணா
ஓய்வூதியம் வழங்கப்படாமல் தாமதமாவதைக் கண்டித்து சேலம் மாநகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர்கள் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று மாநகராட்சி அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.
தற்போது, ஓய்வூதியம் பெறுவதற்கான ஊழியர்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
