நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகளால் பரிதவிக்கும் அரிய வகை பறவை
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் அலகில் சிக்கியதால் அரிய வகை பறவை ஒன்று உணவு இன்றி பரிதவித்து வருகிறது.

தூத்துக்குடி பெருங்குளத்தில், 'பாம்பு தாரா' (Darter) என்ற அரிய வகை பறவையின் அலகில் பிளாஸ்டிக் உரச் சாக்கு சிக்கியதால், கடந்த இரண்டு நாட்களாக உணவு உண்ண முடியாமல் அந்த பறவை கடும் அவதிப்பட்டு வருகிறது. குளங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் இதுபோன்ற நீர்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி பாசன குளங்கள், புலம்பெயர் பறவைகளின் முக்கிய புகலிடங்களாகத் திகழ்கின்றன. ஆனால், சிலர் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பைகள், உடைந்த வலைகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதால், பறவைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இச்செயல்களைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
