எஸ்.ஐ.யை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
ஏரல் பகுதியில் உதவி ஆய்வாளரை சரக்கு ஆட்டோ ஏற்றி கொலை செய்த முருகவேல் என்பவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த முருகவேல் (44), கடந்த 31.01.2021 அன்று இரவு மதுபோதையில் பாரதியார் சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் தகராறு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் பொன் ஆகியோர் விசாரணை நடத்தியபோது, முருகவேல் சரக்கு ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்று போலீஸாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் இரண்டு ஆயுள் தண்டனைகளும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இரு ஆயுள் தண்டனைகளையும் அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
