திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு
திருப்பத்தூரில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், விவசாய இயந்திரங்கள் கிடைப்பது, நீர்நிலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கோட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வருவாய், வேளாண்மை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், சிறுதானியங்கள் அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் எளிதில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் மண் பரிசோதனை வாகனத்தை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வருதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஏரிக்கரைகளில் தடுப்பு வேலிகள் அமைத்தல் மற்றும் ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் குறித்தும் விவசாயிகள் மனு அளித்தனர். இக்கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
