வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி போதை ஊசி: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிகிச்சைக்கு வரத் தொடங்கியிருப்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சி
வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி போதை ஊசியாக செலுத்தும் புதிய வகை போதைப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி, அதனை போதை ஊசியாக செலுத்தி அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய போதை பழக்கத்திற்கு ஆளான இளைஞர்கள் தற்போது சிகிச்சைக்காக மனநல மருத்துவர்களை அணுகத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மனநலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் பி.ஆர். சதீஷ் சங்கர் கூறுகையில், 'பாதுகாக்கப்பட்ட மருந்துகள் பட்டியலில் உள்ள சில வலி நிவாரணிகளை இளைஞர்கள் போதைப்பொருளாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கடும் வலியை போக்குவதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை தவறான முறையில் ஊசி மூலம் செலுத்துவது உயிருக்கு ஆபத்தானது' என எச்சரித்துள்ளார்.
குடும்பக் கண்காணிப்பு குறைவு, வறுமை, கல்விச் சுமை மற்றும் பள்ளி, கல்லூரிக்கு அருகிலேயே போதை மாத்திரைகள் எளிதாகக் கிடைப்பது போன்றவை மாணவர்களின் இந்த திசை மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இது போன்ற செயல்களால் உடல் நடுக்கம், அதீத பயம் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
