ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் எச்சரித்துள்ளார். ஈரானின் மத்திய பகுதியில் உள்ள பிக்ஆக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதியை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய உளவுத்துறையின் தகவல்படி, ஈரான் அங்கு மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமான ஆயுதங்களால் அந்த நிலத்தடி மையத்தை அழிக்க முடியாது என்பதால், அணு ஆயுதத் தாக்குதலே ஒரே வழி என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் ட்ரம்ப்பை வலியுறுத்தி வருவதாக கார்ல்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால், அது ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும். ரஷ்யா ஏற்கனவே மற்ற நாடுகளிடம், அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தங்களுக்கு வழி பிறக்கும் என்று கூறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலும், வடகொரியா-தென்கொரியா இடையிலும் இதேபோன்ற சூழல் உருவாகும்.
முதல் அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பிறகு, மூன்றாம் உலகப்போர் தவிர்க்க முடியாததாகிவிடும். அந்தப் போர் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும்' என்று எச்சரித்துள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்க நிர்வாகம் தனது அணு ஆயுதக் கொள்கையை ரகசியமாக மாற்றியமைத்துள்ளதாகவும், இதன் மூலம் 'போர்க்கள அணு ஆயுதங்களை' (battlefield nukes) பயன்படுத்துவதை எளிதாக்கியுள்ளதாகவும் கார்ல்சன் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ஐயோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், 'ஈரான் விவகாரத்தை நான் முடித்து வைக்காததற்கு ஒரே காரணம், நான் கனிவாக இருக்க விரும்புகிறேன். முடிந்தவரை உயிர்களைக் காக்க நினைக்கிறேன்.
ஆனால், ஒரு கட்டத்தில் நாம் அவர்களைத் தாக்க வேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டார். முன்னதாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் தாக்குதல் நடத்தப்போகிறேனா என்பதை உங்களிடம் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா? தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது, அதே சமயம் ஒரு நல்ல, அழகான ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்த பிறகு ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், உக்ரைன் போரின்போது ரஷ்யா அவ்வப்போது அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வந்துள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெத்வதேவ், நேட்டோ ஆதரவுடன் உக்ரைன் தனது நிலப்பகுதிகளைக் கைப்பற்றினால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


