செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்வதற்காகவும், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (voluntary exit offer) அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், எத்தனை ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சில பிரிவுகளில் இத்தகைய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஜூன் மாதம் அவை மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார்.
கூகுளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவான 'டீப் மைண்ட்' (DeepMind) மற்றும் கூகுள் கிளவுட் (Google Cloud) ஆகிய பிரிவுகள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், அங்கு பணியாளர் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
எதிர்காலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் முதலீடுகளைத் தொடரும் அதே வேளையில், மற்ற சில பிரிவுகளில் பணியாளர்களைக் குறைக்கவும் அல்லது மறுசீரமைக்கவும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தின் தாக்கம் ஏற்கனவே உணரப்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 5,000 ஊழியர்களில், விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஊழியர்களுக்கு, பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாதச் சம்பளம் என்ற அடிப்படையில், அதிகபட்சமாக 12 மாதச் சம்பளம் வரை இழப்பீடாக வழங்கப்படுகிறது. சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழுவில் குறைந்தது நான்கு பேர் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்களாக உள்ளனர். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் டிசம்பர் மாத இறுதியில் பணியிலிருந்து விலகுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


