54-வது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழா வரும் 2026-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், விருது வழங்கும் தொகுப்பாளராகத் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கிறார். இதன் மூலம் சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதற்கிடையில், 2024-ல் வெளியான தமிழ் திரில்லர் படமான 'மகாராஜா', ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. சீனாவில் இப்படம் 91.65 கோடி ரூபாய் வசூலித்து பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஹாலிவுட் நிறுவனம் ஒன்று இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்னணி ஹாலிவுட் நடிகரை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் மேத்யூ மெக்கோனஹே நடிக்கவிருப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவினாலும், அதிகாரப்பூர்வமான நடிகர் விவரங்களை அந்த ஹாலிவுட் நிறுவனமே வெளியிடும் எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.





