தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கோவை பெரியார் அறிவுலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் கன்னிமாரா நூலகம் ஆகியவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கன்னிமாரா நூலகத்தில் மட்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 523 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் தெரிவித்தார். முறைகேட்டில் தொடர்புடைய பதிப்பகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த விவகாரத்தில் பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த எஸ். ஜெயந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்.வி. ஷஜீவனா கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே, நூலக முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி து. அரிபரந்தாமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டவர்களாகக் கருதி தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



