தந்தைக்கு அவரது தந்தை மூலம் கிடைத்த சொத்தில், பேரன் பங்கு கோரவோ அல்லது சொத்தைப் பிரிக்கக் கோரி வழக்கு தொடரவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மசீஹ் மற்றும் சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 29 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒரு தந்தை தனது தந்தையிடமிருந்து பெற்ற சொத்துக்கு அவரே முழு உரிமையாளர் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தச் சொத்தை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் தனது மகன்களைச் சொத்துரிமையிலிருந்து விலக்கி வைக்கவும் அவருக்கு முழு அதிகாரம் உண்டு. இந்தச் சட்டத்தின் கீழ், பேரன்கள் முதல் வகுப்பு வாரிசுகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால், தாத்தாவின் சொத்தில் அவர்களுக்குப் பிறப்புரிமை இல்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இத்தகைய சொத்துகளைக் கூட்டுக்குடும்பச் சொத்தாகக் கருத வேண்டும் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவை ஒரு முழுமையான விதியாகவே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், சட்டத்திற்குப் புறம்பான விளக்கங்களை அளிப்பது ஆண் மற்றும் பெண் வாரிசுகளுக்கு இடையே தேவையற்ற பாகுபாட்டை உருவாக்கும் என்று எச்சரித்தது.





