நவம்பர் 12, வியாழக்கிழமை தொடங்கிய தொழில்நுட்பக் கோளாறால் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட 74 நாடுகளில் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் (Exchange Online) சேவையில் ஏற்பட்ட இந்த பாதிப்பு, தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூரில் அரசு சேவைகளையும் முடக்கியது. ஒன் டிரைவ், ஒன் நோட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 இணைய சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டன. தற்போது சேவைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், சில பயனர்கள் இன்னும் சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான சேவை மீட்புக்கான காலக்கெடுவை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் சர்வர்களில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாகவே இந்த பாதிப்பு நிகழ்ந்ததாக மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது. தரவு இழப்பைத் தவிர்க்க, மின்னஞ்சல் காலாவதியாகும் நேரத்தை 48 மணிநேரமாக நீட்டித்து நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், இந்த பாதிப்பிற்கு எந்தவிதமான தீங்கிழைக்கும் செயல்களும் காரணமில்லை என்றும், சேவை முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

