மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது இணையதளங்கள் மூலம் உடனடி மருத்துவத் தகவல்களைப் பெறுவதையே 61 சதவீத இந்தியர்கள் விரும்புவதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) நடத்திய உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், 60 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் மருத்துவத் தகவல்களை, மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இணையாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் உலகளாவிய சராசரியை விட கணிசமாக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 10 நாடுகளில் சுமார் 10,000 நுகர்வோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிசிஜி-யின் சுகாதார நுகர்வோர் குறியீட்டில், 100-க்கு 66 புள்ளிகளைப் பெற்று சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சிகிச்சை முடிவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றில் அதிகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என இந்திய நோயாளிகள் விரும்புவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 78 சதவீதத்தினர் தங்களின் சிகிச்சை முறைகளைத் தீர்மானிப்பதிலும், 73 சதவீதத்தினர் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
டிஜிட்டல் கருவிகள் வசதியையும் அணுகலையும் அதிகரித்தாலும், தவறான மருத்துவத் தகவல்கள் பரவும் அபாயம் மற்றும் டிஜிட்டல் அறிவு குறைவாக உள்ளவர்கள் புறக்கணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக பிசிஜி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நோயாளிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்கும், அதே வேளையில் மருத்துவத் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.




