கொல்லிமலையில் மழை வேண்டி உடலில் கரி பூசி பழங்குடியினர் வழிபாடு
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடும் வறட்சி நிலவும் சூழலில், மழை வேண்டி மலைக்கிராம மக்கள் தங்கள் உடலில் கரியைப் பூசி பாரம்பரிய முறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நிலவும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தின்னூர் நாடு, வாசலூர்பட்டி, சேத்துபிளாா, நரியன்கிணறுபட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மழை வேண்டி பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, கிராமத்து ஆண்கள் தங்கள் முகம் மற்றும் உடலில் கரியைப் பூசிக்கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மழை இல்லாத காலங்களில் கிராமத்து ஆண்கள் ஒன்றுகூடி மாட்டுச் சாணம் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்து, உடலில் கரியைப் பூசிக்கொண்டு வழிபடுவது தங்களின் மூதாதையர் காலத்திலிருந்தே தொடரும் வழக்கம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். கொல்லிமலையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மழை பெய்வதற்காக இந்த நூதன வழிபாடு நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
