தஞ்சை ஆட்சியரின் பெயரில் வரும் போலி செல்போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேசுவதாகக் கூறி பொதுமக்களிடம் பணமோசடி செய்ய முயலும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் ஆர்.ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில் மர்ம நபர்கள் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு தொலைபேசி எண்கள் மூலம் மட்டுமே அழைப்புகள் மேற்கொள்ளப்படும். வங்கி விவரங்கள், ஓடிபி (OTP) அல்லது பணப் பரிமாற்றம் தொடர்பாக அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்பதில்லை. எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
அரசு நிர்வாகத்தின் பெயரைப் பயன்படுத்தி இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
