பேராவூரணியில் வாரச்சந்தையை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் மறியல்
பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. சந்தையைப் புதுப்பிக்கும் பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நேற்று காய்கறிகளைச் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
புதுப்பிக்கப்பட்ட சந்தையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த வியாபாரிகள், தாங்களாகவே இடங்களைத் தேர்வு செய்து கடை அமைக்கத் தொடங்கினர். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர் கூறும்போது, அனைத்து வியாபாரிகளுக்கும் குலுக்கல் முறையில் முறைப்படி கடைகள் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், சிலர் அத்துமீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
