கோவை: ஆண்டுக்கு 365 நாட்களும் விவசாயம் செய்யும் இயற்கை அமைப்பு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு உள்ளது. சரியான சூரிய ஒளி, அளவான மழைப்பொழிவு, ஆரோக்கியமான மண் ஆகியவை நமக்கு மிகப்பெரிய பலம்,” என ஐ.நா. சபை விருது பெற்ற இயற்கை விவசாயி வள்ளுவன் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியை சேர்ந்த விவசாயி வள்ளுவனின் பண்ணை பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு அவரது நிலத்தில் மண்ணின் அங்கக கரிமச்சத்து வெறும் 0.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை விவசாய முறையில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கியதற்காக, ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் பிரிவு அவருக்கு உலகளவில் சிறந்த இயற்கை விவசாயி விருதை வழங்கியுள்ளது.
நஷ்டத்தில் இருந்து லாபத்துக்கு மாற்றிய பல பயிர் முறை:
வள்ளுவன் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தென்னை விவசாயம் செய்து வருகிறார். ஆரம்ப காலங்களில் தென்னை விவசாயம் அவருக்கு லாபகரமாக அமையவில்லை. ஒரு தென்னை மரத்திலிருந்து சராசரியாக 110 தேங்காய்கள் கிடைத்தாலும், செலவினங்களை ஒப்பிடும்போது வருமானம் குறைவாகவே இருந்தது.
இந்த நிலைமையில் இருந்து வெளியேற, நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களை வாசித்த அவர், பின்னர் இயற்கை விவசாயம் மற்றும் பல பயிர் பல அடுக்குமுறை சாகுபடி குறித்து ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஒரே பயிரை மட்டுமே நம்பியிருக்கும் விவசாய முறை, விலை வீழ்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சூழ்நிலைகளில் விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளுவதாக அவர் உணர்ந்தார்.
தமிழகத்தில் பாரம்பரியமாக பல பயிர், பல அடுக்குமுறை சாகுபடி நடைமுறையில் இருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஒரே பயிர் சாகுபடி அதிகரித்ததால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது என வள்ளுவன் கூறுகிறார்.
மண் வளம் உயர்ந்தால் வருமானமும் உயரும்:
வள்ளுவன் தனது பண்ணையில் மரப்பயிர் சார்ந்த பல அடுக்குமுறை விவசாயத்தை நடைமுறைப்படுத்தினார். மரங்களில் இருந்து விழும் இலைகள் மண்ணில் மூடாக்காக பயன்படுத்தப்பட்டன. நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் மூத்திரம் கரைத்து வடிகட்டி, சொட்டு நீர் பாசனம் மூலம் நிலத்துக்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம் மண் வளம் படிப்படியாக அதிகரித்தது. முன்பு ஏக்கருக்கு ரூ.30,000 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், தற்போது அது பத்து மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
உலகளவில் மூன்றாவது பரிசு:
வள்ளுவனின் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட மண்வள மேம்பாட்டு முயற்சிகள் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் உலகளவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.
அவரது பண்ணையில் 9,000க்கும் மேற்பட்ட தடி மரங்களும், 2,000க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் உள்ளன. பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு ஊடுபயிர்களும் பயிரிடப்படுகின்றன. மரங்கள் அதிகமாக இருப்பதால், பண்ணையின் வெப்பநிலை வெளிப்புற பகுதிகளை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக மிளகு, காபி, ஜாதிக்காய் போன்ற பயிர்களையும் வளர்க்க முடிகிறது. மண் வளம் அதிகரித்ததால் வறட்சி காலங்களிலும் பெரும் பாதிப்பின்றி பயிர்கள் வளர்ந்துள்ளன. மேலும், வெள்ளை ஈ தாக்குதலும் குறைந்துள்ளது.
மரம் சார்ந்த விவசாயம் காலத்தின் தேவை:
தற்போது கார்பன் உமிழ்வு அதிகரித்து, காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமில மழை போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகள் உருவாகின்றன. இந்த நிலையை சமாளிக்க மரங்கள் சார்ந்த விவசாயம் அவசியம் என வள்ளுவன் வலியுறுத்துகிறார்.
“நமக்கு கிடைத்துள்ள இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தினால், தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவே ஆண்டுக்கு 365 நாட்களும் விவசாயம் செய்யக்கூடிய திறன் கொண்டது. மண் வளத்தை பாதுகாப்பதும், பல பயிர் முறையை பின்பற்றுவதும் விவசாயிகளின் வருமானத்தையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
Agri News
மரம் சார்ந்த விவசாயம் காலத்தின் கட்டாயம்..
வெளியிடப்பட்டது: •புதுப்பிக்கப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு




