அறுவடை காலத்தில் குவிண்டாலுக்கு ₹2,200–₹2,400 விலை கிடைக்க வாய்ப்பு!
சோளம் பயிரிட உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) முக்கிய விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 அக்டோபர்–நவம்பர் அறுவடை காலத்தில் தரமான சோளத்திற்கு பண்ணை விற்பனை விலை குவிண்டாலுக்கு ₹2,200 முதல் ₹2,400 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான சோளத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குவிண்டாலுக்கு ₹2,410 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் சந்தை விலை MSP-யை விட சற்று குறைவாக இருக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சாகுபடி மற்றும் விற்பனை திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று TNAU அறிவுறுத்தியுள்ளது.
இந்த விலை முன்னறிவிப்பு, கடந்த 15 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை சந்தையில் பதிவான சோள விலைகள், தற்போதைய சந்தை ஆய்வு மற்றும் தேவை-விநியோக நிலவரங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு 5.51 கோடி டன் சோள உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதால் சந்தையில் அதிகளவு வரத்து இருக்கும். அதே நேரத்தில் கோழித்தீவனம், கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்தி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளால் சோளத்திற்கு தொடர்ந்து தேவை நிலவுகிறது. இருப்பினும், எத்தனால் தயாரிப்பில் FCI அரிசியின் பயன்பாடு அதிகரிப்பது சோள விலைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த விலை முன்னறிவிப்பு, விவசாயிகள் சரியான சாகுபடி முடிவுகளை எடுக்க உதவும் முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என வேளாண் நிபுணர்கள் கருதுகின்றனர்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




