கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 31 வயதான சர்வேஷ், 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி இந்த சாதனையைப் படைத்தார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இரு வீரர்களும் 2.28 மீட்டர் உயரத்தைத் தாண்டத் தவறிய நிலையில், 'கவுண்ட்பேக்' விதிமுறைப்படி ஜமைக்காவின் ரோமைன் பெக்ஃபோர்ட் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
2022-ம் ஆண்டு தேஜஸ்வின் சங்கர் வென்ற வெண்கலப் பதக்கமே இதுவரை இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த சாதனையாக இருந்தது. தற்போது சர்வேஷ் அதை முறியடித்துள்ளார். அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ஆதர்ஷ் ராம் 2.15 மீட்டர் உயரம் தாண்டி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். தேஜஸ்வின் சங்கர் டெகாத்லான் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்தப் போட்டியிலிருந்து விலகினார். இங்கிலாந்தின் ஜாக் கிமானி 2.20 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த சர்வேஷ், தனது தந்தை அமைத்துக் கொடுத்த எளிய பயிற்சித் தளத்தில் பயிற்சி பெற்று வளர்ந்தவர். தேசிய அளவில் 2.31 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ள அவர், உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார். இந்த மாத தொடக்கத்தில் மொனாக்கோ டைமண்ட் லீக் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்த சர்வேஷ், தற்போது காமன்வெல்த் பதக்கத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


