லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், 'ஸ்பிரைட்' (Sprite) தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என இனி அழைக்கப்படும் என்று இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) அறிவித்துள்ளது. இந்திய ரயில் வரலாற்றில் ஒரு வணிக நிறுவனத்தின் பெயரில் ரயில் இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ரயில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த அதிவேக ரயிலில், பயணிகளுக்கான உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. மேலும், கார்ப்பரேட் அல்லது சமூக நிகழ்வுகளுக்காக 78 இருக்கைகள் கொண்ட முழு ஏசி சேர் கார் பெட்டியையும் முன்பதிவு செய்யும் வசதி இதில் வழங்கப்படுகிறது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியார் ரயிலாகக் கருதப்பட்டாலும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்காக இந்திய ரயில்வேக்கு IRCTC கட்டணம் செலுத்தி வருகிறது. இந்த பிராண்டிங் முயற்சி, தேசிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒரு தனித்துவமான மைல்கல் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




