தமிழகத்தில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை 16,830 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, வளாகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் உயிரிழந்தது டெங்குவால் அல்ல, பூச்சிக் கடியால் பரவும் 'ஸ்க்ரப் டைபஸ்' தொற்றுநோயால்தான் என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், வளாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாததே காய்ச்சல் பரவக் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, முறையாகப் பராமரிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பலர் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

