மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) திரைப்படங்களுக்கான தணிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய திருத்தம் இதுவாகும். வன்முறை, குற்றச் செயல்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதே இந்த புதிய விதிமுறைகளின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, குழந்தைகள் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு சாட்சிகளாகவோ சித்தரிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் தொடர்பான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களில், போதைப்பொருட்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மற்றும் சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது விலங்குகள் மீது தேவையற்ற வன்முறையை வெளிப்படுத்தும் வகையிலோ காட்சிகள் இருக்கக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது பிற நாடுகளுடனான தூதரக உறவுகளைப் பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்களுக்குக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைச் செய்யும் முறைகளை, அவை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாகவோ அல்லது குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவோ சித்தரிக்கக்கூடாது எனத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் புதிய வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

