இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் உள்ள சுதிர்மான் மலைத்தொடரில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த 'நித்திய பனி' (eternal snow) தற்போது முற்றிலுமாக மறையும் நிலையை எட்டியுள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, இந்த மலைத்தொடரின் நான்கு முக்கிய சிகரங்களிலும் பனி மற்றும் பனிப்பாறைகள் படர்ந்திருந்தன.
ஆனால், தற்போது 'கார்ஸ்டென்ஸ் பிரமிட்' என்று அழைக்கப்படும் புஞ்சாக் ஜெயா சிகரத்தைச் சுற்றியுள்ள மிகச்சிறிய பகுதிகளில் மட்டுமே பனி எஞ்சியுள்ளது. இதுவும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் சுமார் 1,900 ஹெக்டேராக இருந்த பனிப்பாறைகளின் பரப்பளவு, இன்று வெறும் 16 ஹெக்டேராகச் சுருங்கியுள்ளது.
இந்த மாற்றத்தை நேரில் ஆய்வு செய்த செக் குடியரசைச் சேர்ந்த பனிப்பாறை சூழலியல் நிபுணர் மேரி சபாக், "இதில் ஒரு ஆழ்ந்த அநீதி உள்ளது" என்று குறிப்பிட்டார். ஆண்டிஸ் மற்றும் இமயமலைக்கு இடைப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே வெப்பமண்டல பனிப்பாறைகள் இவைதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். புஞ்சாக் ஜெயா சிகரத்தின் சரிவுகளில் எடுக்கப்பட்ட பனி மாதிரிகள், பூமியின் காலநிலை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணங்களாக உள்ளன.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் வளிமண்டலம் வெப்பமடைவதே இந்த பனிப்பாறைகள் உருகுவதற்கு முதன்மைக் காரணம் என்று சபாக் விளக்குகிறார். வெப்பநிலை உயர்வால், பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பொழிவது அதிகரித்துள்ளது. இது பனிப்பாறைகளின் வாழ்நாளைக் குறைக்கிறது.
இந்த பனிப்பாறைகளின் மறைவு, ஒரு உயிரியல் வாழ்விடத்தை அழிப்பதுடன், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பையும் சிதைக்கிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த மலைப்பகுதி உள்ளூர் பழங்குடியினருக்கு ஆன்மீக ரீதியாக மிகவும் புனிதமானது. மோனி மக்கள் இதை 'ம்பைங்கேலா' என்றும், அமுங்மே மக்கள் 'நெமங்காவி' (வெள்ளை அம்பு) என்றும் அழைக்கின்றனர்.
"முஸ்லிம்களுக்கு மெக்காவும், கத்தோலிக்கர்களுக்கு வத்திக்கானும் எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே அமுங்மே மக்களுக்கு நெமங்காவி மலை முக்கியமானது. அது அழிக்கப்படும்போது எங்களின் ஆன்மீக அடித்தளமே சிதைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று அமுங்மே சமூகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அடோல்ஃபினா கும் வேதனையுடன் கூறுகிறார். அமுங்மே சமூகத்தைச் சேர்ந்த எல்ஃபிரிடா நாட்கிமே, "நெமங்காவி மலை நேர்மை மற்றும் தூய்மையின் அடையாளமாகத் திகழ்கிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இந்த மலையைப் போல உறுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்" என்று குறிப்பிட்டார். இதற்கிடையில், இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் செம்பு மற்றும் தங்கச் சுரங்கத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சமூக மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுரங்கத் தொழிலால் வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், பாரம்பரிய நிலங்களுக்கான அணுகல் பறிபோயுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, டென்மார்க் ஆராய்ச்சியாளர் கிளாஸ் தைமன் தலைமையிலான குழுவினர், ட்ரோன்கள் மற்றும் முப்பரிமாண மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எஞ்சியிருக்கும் பனிப்பாறைகளை ஆவணப்படுத்தி வருகின்றனர். 2000-களின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை பனிப்பாறைகளின் பரப்பளவு 95 சதவீதம் குறைந்துவிட்டதாக அவர் உறுதிப்படுத்துகிறார். "நித்தியமானது என்று கருதப்பட்ட ஒன்று மறைந்து வருவது, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி" என்று அவர் கூறுகிறார்.


