கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூட்டுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்குத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பயிர்க்கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. தொலைபேசி வாயிலாகக் கடன் வசூலிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ள நிலையில், வசூலிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதை கூட்டுறவுத் துறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கடன் வசூலிப்பு தொடர்பாக யாரேனும் தொடர்பு கொண்டால், அது குறித்து 98840 00845 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரளிக்கும் விவசாயிகள், அழைப்பு வந்த அலைபேசி எண் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




