சமையல் கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர், பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் செஃப் தாமு. கோதண்டராமன் தாமோதரன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், இன்று உலகப்புகழ் பெற்ற சமையல் கலைஞராகத் திகழ்ந்தாலும், இவரது தொடக்க காலம் மிகவும் சவாலானது. சென்னையில் பிறந்த இவர், தனது வாழ்க்கைப் பயணத்தை ஹோட்டல் சமையலறைகளில் பாத்திரங்கள் கழுவும் பணியாளராகவே தொடங்கினார்.
கடும் உழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் சமையல் கலையின் மீதான தீராத ஆர்வம் ஆகியவற்றால் படிப்படியாக உயர்ந்து, இன்று சமையல் உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறியுள்ளார். செட்டிநாடு மசாலாக்கள், பாரம்பரிய சைவ உணவுகள் மற்றும் கடல் உணவு வகைகள் எனத் தமிழ்நாட்டின் உணவுப் பாரம்பரியத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
இவரது சமையல் கலைத் திறமைக்காக லண்டனில் உள்ள சவுத் ஏசியன் அசோசியேஷன் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது. கடந்த 2025-ஆம் ஆண்டில், தனது 70-வது வயதில், சமையல் கலைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. சமையல் கலை குறித்த தனது ஆர்வம் குறித்துப் பேசிய தாமு, தனது தாயார் கோதைநாயகிதான் தனக்குச் சுவையின் அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.
மீன் குழம்பு, மட்டன் குருமா மற்றும் சிறுதானிய உணவுகள் எனத் தனது தாயார் தயாரிக்கும் உணவுகளே சமையல் மீதான ஈர்ப்பை தனக்குள் விதைத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சமையல் துறையில் நிலவும் பாகுபாடுகள் குறித்துப் பேசிய அவர், 'நான் பணியைத் தொடங்கிய காலத்தில் சமையல்காரர் என்று அழைப்பது ஒருவிதக் குறையாகவே பார்க்கப்பட்டது.
கேட்டரிங் துறை இன்றும் தீண்டத்தகாத துறை போலக் கருதப்படுவது மாற வேண்டும்' என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார். தனது சாதனைகள் குறித்துப் பேசிய அவர், '24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தபோது, தேசியக் கொடியைப் பிடித்தது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். கின்னஸ் புத்தகத்தில் என் பெயரைக் கண்டபோது, சாதித்துவிட்டதாக உணர்ந்தேன்' என்று குறிப்பிட்டார்.
20-க்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்களை எழுதியுள்ள தாமு, தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தின் உணவுப் பட்டியலை மேம்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளியான இவர், 'குக் வித் கோமாளி' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இன்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.


