தங்கள் தயாரிக்கும் பிரெட்டில் 100 சதவீதம் முழுமையான கோதுமை இருப்பதாக விளம்பரம் செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தாமாக முன்வந்து நடத்திய விசாரணையில், அந்த பிரெட்டில் 62 சதவீதம் மட்டுமே கோதுமை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, முழு கோதுமை பிரெட் என குறிப்பிட அதில் குறைந்தபட்சம் 75 சதவீத கோதுமை இருக்க வேண்டும். 62 சதவீத கோதுமையை மட்டும் பயன்படுத்திவிட்டு 100 சதவீதம் எனக் கூறுவது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் நேர்மையற்ற வணிக முறை என ஆணையத்தின் முதன்மை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
இந்தத் தவறான விளம்பரத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலிருந்தும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பிரிட்டானியா நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


