இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையர்கள் ஷுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அமைச்சரவை செயலர் டி. வி. சோமநாதனுக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தகவல்கள் மூலம் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 29-ம் தேதி இந்த கடிதங்கள் அமைச்சரவை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் நிர்வாகப் பிரிவில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு மணீஷ் கார்க்கிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
அவர் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே, மூத்த அதிகாரிகளிடையே பணி ஒதுக்கீட்டை மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்ததாக தேர்தல் ஆணையர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, ஆணையத்துடனோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மணீஷ் கார்க்கின் இந்தச் செயல்பாடு தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குப் புறம்பானது என்றும், நிர்வாகப் பிரிவில் இருந்து கோப்புகளைப் பெறுவதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதங்கள் தங்களுக்குக் கிடைத்ததை அமைச்சரவை செயலர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த புகார்கள் தொடர்பாக ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் ஆர்டிஐ பதிலில் இடம்பெறவில்லை. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான செய்திகள் தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் செய்திகளை தேர்தல் ஆணையம் மறுத்திருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் உள் விவகாரங்கள் குறித்த இந்த புதிய தகவல் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




