மும்பை திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பல், நடிகர் டைகர் ஷெராப்பைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், அமீர் கான், கங்கணா ரனாவத் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரையும் குறிவைத்துள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. தொடக்கத்தில் சல்மான் கானை இலக்காகக் கொண்ட இந்தக் கும்பல், அந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எளிதாகத் தாக்கக்கூடிய பிற நட்சத்திரங்களைத் தேடியதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, மும்பைக்குச் சுற்றுலா வந்தவர்கள் போல வேடமிட்டு, பிரபலங்களின் வீடுகளை இந்தக் கும்பல் கண்காணித்து வந்துள்ளது. குறிப்பாக, நடிகர் டைகர் ஷெராப் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜூஹு பகுதியில் கால்பந்து விளையாட வருவதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் தெரிந்துகொண்ட அவர்கள், அக்டோபர் 11 அன்று மைதானத்தைக் கண்காணித்து, அக்டோபர் 18 அன்று அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் சுமார் 20 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு வந்து, ஆட்டோ மற்றும் பைக் சேவைகளைப் பயன்படுத்திப் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர். பிரபலங்களின் வீடுகளுக்கு வெளியே புகைப்படம் எடுப்பது போல நடித்து அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், அமிதாப் பச்சன், அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் வீடுகளும் அவர்களின் கண்காணிப்பில் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிம் காலத்தைப் போல, பாலிவுட்டைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர லாரன்ஸ் பிஷ்ணோய் திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது. திரைப்பிரபலங்களின் பாதுகாப்பு அபாய நிலையை மாநில அளவிலான குழு அவ்வப்போது மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பாதுகாப்பை வழங்கி வருகிறது. சல்மான் கானுக்கு 2022 நவம்பரில் 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டது; பாபா சித்திக் படுகொலைக்குப் பிறகு, அக்டோபர் 2024-ல் அது மேலும் பலப்படுத்தப்பட்டது.
தற்போது அவருடன் ஆயுதம் ஏந்திய நான்கு கமாண்டோக்கள் உட்பட 11 முதல் 12 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இதேபோல், 'பட்டான்' பட விவகாரத்தைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கு 2023 அக்டோபரில் 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கங்கணா ரனாவத்திற்கு 2020 செப்டம்பரில் மத்திய அரசு 'ஒய் ப்ளஸ்' பாதுகாப்பை வழங்கியது.
அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது; இதில் சுழற்சி முறையில் இரு பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில், பல நடிகர்கள் உள்ளூர் காவல்துறை அல்லது தனியார் பாதுகாப்பு மூலம் கூடுதல் பாதுகாப்பைப் பெற்று வருகின்றனர், இதற்கான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.




