கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்த ஆய்வில், வாக்காளர்கள் தங்களை தாங்களே இறந்ததாகக் குறிப்பிட்டு விண்ணப்பம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் குறைந்தது 37 பேர், தாங்கள் இறந்துவிட்டதாகக் கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரி 'படிவம் 7'-ஐ சமர்ப்பித்துள்ளனர்.
இதுதவிர, 334 ஜோடிகள் ஒருவரை ஒருவர் இறந்ததாகக் குறிப்பிட்டு படிவங்களை தாக்கல் செய்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான சம்பவங்கள் மாநிலத்தின் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. இதில் பெலகாவி மாவட்டத்தில் அதிகபட்சமாக 160 வழக்குகளும், கலபுரகியில் 80 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பல இடங்களில், ஒரே வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஒருவரை ஒருவர் இறந்ததாகக் குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. மாகடி, சாந்தூர் மற்றும் பையப்பனஹள்ளி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணையில், விண்ணப்பதாரரும், நீக்கப்பட வேண்டிய நபரும் ஒரே நபராக இருக்கும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குளறுபடிகளுக்கு மென்பொருள் கோளாறுகளே காரணம் என்று சில அதிகாரிகள் கருதுகின்றனர்.
அதேசமயம், ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு முன்பே இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக மற்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த குளறுபடிகள் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்டதா அல்லது வாக்காளர் தரவுத்தளத்தில் உள்ள பிழைகளா என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



