மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருந்த எல். முருகன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் 2030-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருந்தபோதிலும், அதையும் அவர் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் விலகினர். அவர்களது பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த விலகல் நிகழ்ந்தது. ஆனால், எல்.முருகனின் ராஜினாமா அத்தகைய காரணங்கள் இன்றி நிகழ்ந்திருப்பது மர்மத்தை அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள ஒரு முன்னணி ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, பாலிவுட் நடிகை ஒருவருக்கு அனுப்பப்பட்ட பொருத்தமற்ற குறுஞ்செய்திகள் தொடர்பாக, அந்த நடிகை பிரதமர் மோடியின் அரசு உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் உடனடியாக ஆளும் கட்சியின் மேலிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே எல். முருகன் தனது அமைச்சர் மற்றும் எம்பி பதவிகளை ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வமான முழுமையான காரணங்கள் இன்னும் மர்மமாகவே நீடிக்கின்றன.





