குழந்தைகளுக்கான இணைய அணுகல் என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு அடிப்படையில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு மற்றும் 19(1)(a) பிரிவின் கீழ், ஒவ்வொரு தனிநபருக்கும் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வி.சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது. குழந்தைகள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கும் இதே உரிமைகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மனசாட்சியோ அல்லது கருத்து சுதந்திரமோ இல்லை என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, அதேபோல்தான் இணையத் தடையையும் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு மற்றும் மற்றொரு மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக ஊடகத் தளங்கள், குழந்தைகளைச் சுரண்டும் மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களை (CSEAM) இந்திய அதிகாரிகளிடம் புகாரளிப்பதில் தவறிவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குழந்தைகளின் பாதுகாப்பும், அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; இவை இரண்டுமே குழந்தைகளுக்குத் தேவை என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். வயது வரம்பு அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகத் தளங்களில் கடுமையான பெற்றோர் கட்டுப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கங்களை நீக்குதல் மற்றும் 'சைல்ட் மோட்' (Child Mode) போன்ற வசதிகளை அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சட்டம் தடை செய்தாலும், குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான கடுமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் இத்தகைய கொடூரமான உள்ளடக்கங்கள் தொடர்ந்து பகிரப்படுவது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் இணையத்தில், குறிப்பாக குழந்தைகள் எளிதில் அணுகக்கூடிய தளங்களில் இருப்பதற்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினர். இந்த விவகாரத்தில், உறுதிப்படுத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கங்கள் தொடர்பான டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் இணையதள முகவரிகளின் (URL) தேசிய தரவுத்தளத்தை உருவாக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்தகைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.




