சிஜேபி அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, டெல்லி சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை நடைபெறவுள்ள ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தையொட்டி, அப்பகுதியில் 25,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கன்னாட் பிளேஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தேசியக் கொடியை ஏற்றி, அது குற்றமல்ல என்பதை நிரூபிக்க மக்கள் ஒன்று கூடுமாறு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், பொதுமக்கள் அங்கு கூட வேண்டாம் என டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், நிர்வாக காரணங்களுக்காக சென்ட்ரல் பூங்கா வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். சென்ட்ரல் பார்க் மற்றும் ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையப் பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களில் சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் பாட அனுமதி வழங்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




