தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், விடுபட்டவர்களை இணைக்கவும் சிறப்பு சுருக்கத் திருத்த (எஸ்எஸ்ஆர்) பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 1, 2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதிப் பட்டியல் 2027 ஜனவரி 4-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி மறுசீரமைப்பு நவம்பர் 2-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், 2 சதவீதத்திற்கும் அதிகமான பெயர் நீக்கங்கள் இருந்தால் தேர்தல் பதிவு அதிகாரிகள் அவற்றை நேரடியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் பிரிக்கப்படக்கூடாது என்றும், நீக்கல் தொடர்பான உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த எஸ்எஸ்ஆர் நடைமுறை தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பஞ்சாப், பிஹார் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. பிற மாநிலங்களுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்ஐஆர் எனப்படும் தீவிர திருத்த நடைமுறையிலிருந்து இது மாறுபட்டது என்றும், இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறை என்றும் விளக்கப்பட்டுள்ளது.




