பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ராகோபூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 15 முதல் 20 பேர் படகில் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது; உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் நிர்வாகத்தினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் துணை முதல்வர் சம்ராட் சவுத்ரி அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



