ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சிஎம்டிஏ காலனி பூங்கா அருகேயுள்ள கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும்.
கும்பகோணம், தஞ்சாவூர், நாகை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. அங்கிருந்து மொத்தம் 106 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்ல 45 இலவச மாநகரப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை, வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாகப் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாகவும், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


