தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ‘இண்டியா கேட்’ பகுதியில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க இந்தப் பேரணியில் பொதுமக்கள் அனைவரும் கட்சி, சாதி, மத, மாநிலப் பாகுபாடின்றி பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “வாக்குத் திருட்டைத் தடுக்கவும், எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்குத் தடை விதிக்கவும், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் தேசத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பேரணியாகச் சென்று நமது சகோதரத்துவத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இண்டியா கூட்டணி சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 6-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடைபெற்றது.
தொடர்ந்து 7-ம் தேதி ஜந்தர் மந்தர் பகுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 8-ம் தேதி காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது. மேலும், 9-ம் தேதி இண்டியா கூட்டணி தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து மனு அளித்தனர்.
இன்றைய பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியின் நிறைவாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்தைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நேரம் ஒதுக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




